வாகன உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணம்?

RRK

நிர்மலா சீதாராமன்: வாகன உற்பத்தி வீழ்ச்சிக்கு இளம் தலைமுறையினரின் மனநிலையும் காரணம்

இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களில் அரசே 100 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யுமென்றும் கூறியிருக்கிறார்.

இந்தியப் பிரதமராக நரேந்திர மோதி இரண்டாவது முறையாகப் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அந்த நூறு நாட்களில் பா.ஜ.க. அரசு செய்த சாதனைகளை விளக்குவதற்காக மத்திய அமைச்சர்கள் நாடு முழுவதும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்திவருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடத்தினார். செய்தியாளர் சந்திப்பு துவங்கியவுடன் கடந்த நூறு நாட்களில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்த விளக்கப் படத்தை வெளியிட்டு நிர்மலா சீதாராமன் விளக்கினார்.

காஷ்மீருக்கு சலுகைகளை அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டிருப்பது, ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, 1.95 கோடி வீடுகள் அடுத்த 2 ஆண்டுகளில் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது, 2022க்குள் அனைவருக்கும் குடிநீர், மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஆகியவற்றை முக்கிய சாதனைகளாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

பல வங்கிகளில் கடன் கொடுப்பதற்கான திறனும் பணமும் இல்லையென்றும் சில வங்கிகளில் பணம் உள்ளது; ஆனால், கடன் வாங்க ஆட்கள் இல்லை. ஆகவே வங்கிகளை இணைப்பதன் மூலம் கடன் வழங்கப்படுவது எளிதாக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். முதலில் மோட்டார் வாகனத் தொழிலில் ஏற்பட்டிருக்கும் தேக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. "அந்தத் துறையில் உள்ள அனைவரிடமும் பேசியிருக்கிறோம். தற்போது ஏற்பட்டுள்ள நிலை பல காரணங்களால் ஏற்பட்டிருக்கிறது. மின்சார வாகனங்கள் மட்டுமல்லாமல் எந்த வாகனங்களை வாங்கினாலும் அதில் வரிச் சலுகை அறிவித்திருக்கிறோம். தொடர்ந்து தொழில்துறையினரோடு பேசிவருகிறோம்" என்றார்.

தொழில்துறையினர் ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டுமெனக் கோரி வருகிறார்கள். இதில் தனிப்பட்ட முறையில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. இதில் ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும். ஆட்டோமொபைல் துறையினர் சில விஷயங்களைக் கேட்டிருக்கிறார்கள். அது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார் நிதியமைச்சர்.

இப்போது இரண்டு விதமான காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. முதலில் அரசு பணத்தைத் திட்டங்களில் செலவழிப்பது. அதன் மூலம் நுகர்வை அதிகரிப்பது. அரசு செலவழிக்க சரியான வழி, உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது. அதற்காகத்தான் 100 லட்சம் கோடியை உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறோம். எந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு தன் பணியைத் துவங்கிவிட்டது. விரைவில் திட்டங்கள் துவங்கும் என்றார். ஜிஎஸ்டி வரி வருவாயை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

சமீபத்தில் வங்கிகள் இணைப்பு அறிவிக்கப்பட்டது. அது எப்போது நடக்குமென கேட்டபோது, சம்பந்தப்பட்ட வங்கிகளின் வாரியம் இது குறித்து முடிவெடுக்கும் என்றும் நுகர்வோரிடமும் மக்களிடமும் சந்தையிடமும் நம்பிக்கையை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

ஒரு குறிப்பிட்ட காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருப்பதை தான் மறுக்க விரும்பவில்லையென்றும் ஆனால், கடந்த காலத்திலும் இதுபோல நடந்திருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அடுத்த காலாண்டில் நிலைமை மேம்படும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கியிலிருந்து 1.76 லட்சம் கோடியை அரசு பெற்றது குறித்து கேட்டபோது, ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவே எவ்வளவு சதவீதத்தை அரசுக்கு அளிக்கலாம் என்பதை முடிவெடுத்ததாகவும் அதன் படியே ரிசர்வ் வங்கி அரசுக்கு பணம் அளித்ததாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். கடந்த காலங்களிலும் ஏதோ ஒரு கணக்கின்படி ரிசர்வ் வங்கியிலிருந்து அரசுக்கு பணம் அளிக்கப்பட்டதாகவும் அதற்கான கணக்கீடு மட்டும் மாறிவருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தங்க விலை உயர்வு குறித்து கேட்டபோது, தங்கம் முழுமையாக இறக்குமதி செய்யப்படுவதாகவும் அதன் விலையை பெட்ரோலியத்தின் விலை, டாலரின் மதிப்பு உட்பட பல அம்சங்கள் முடிவுசெய்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களில் 100 லட்சம் கோடியை உள்கட்டமைப்புத் திட்டங்களில் செலவழிக்கப்போவதாக மத்திய அரசு கூறும் நிலையில், அந்த நிதியை தனியாரிடமிருந்து எதிர்பார்க்கிறீர்களா அல்லது அரசே முதலீடு செய்யுமா என பிபிசி கேட்டபோது, அரசே முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அந்த அளவுக்கு அரசால் பணத்தை முதலீடு செய்ய முடியுமா எனக் கேட்டபோது, அப்படித்தான் வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்றார் நிர்மலா சீதாராமன்.

காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ஒரு செய்தியாளர், இதேபோல பிற மாநிலங்களிலும் செய்யப்படுமோ என்ற அச்சம் இருப்பதாக கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர், காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து தற்காலிகமானது என்றும் இதனை நீக்கியதால் அந்த மாநிலம் பாதிக்கப்படாது என்றும் அம்மாநிலத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி, நிதி கமிஷன் கூறுவதைப் போல ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பிற மாநிலங்கள் இது குறித்து அச்சப்பட தேவைில்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதன் மூலம் வாகனத் துறையை ஊக்குவிக்க முடியாதா எனக் கேட்டபோது, இரண்டாண்டுகளுக்கு முன்புவரை வாகன உற்பத்தித் துறை மிகச் சிறப்பாக செயல்பட்டுவந்ததாகக் கூறிய நிர்மலா சீதாராமன், பிஎஸ் 6 தரக்கட்டுப்பாடு, பதிவுக் கட்டண உயர்வு, கார்களை வாங்குவதற்குப் பதிலாக வாடகை கார்களில், மெட்ரோவில் செல்லலாம் என்ற மனநிலை ஏற்பட்டிருப்பது ஆகிய பல காரணங்கள் இந்த மந்த நிலைக்கு காரணம் என நிர்மலா சீதாராமன் கூறினார்.

பல்துறையைச் சேர்ந்தவர்களுடன் அரசு பேசி வருவதாகவும் கடந்த சில வாரங்களில் சில முக்கிய வாக்குறுதிகளும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து அரசு இது தொடர்பாக செயல்பட்டுவருவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Source : BBC Tamil

Related Posts you may like

சுடச் சுட...

 • நெல்லை மாவட்டம் திசையன்விலையில் பெட்டிக்கடை நடத்தி வந்த ராஜாமணி என்பவர் வெட்டி கொலை.. குடி போதையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த தகராறில் பொன்முருகேசன், மலைகொண்ட பெருமாள், சதீஷ் ஆகியோர் சேர்ந்து வெட்டி கொலை செய்ததாக தகவல். திசையன்விலை போலீசார் விசாரணை.

  09:09:16 AM


 • திருச்சி பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை சம்பவத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஏழு பேரில் ரவீந்திரன்,ஜோசப், கிருஷ்ணவேணி ஆகிய மூன்று பேர் உடல் நலக்குறைவு காரணமாக விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

  உடல்நிலை சீரான பிறகு மீண்டும் அந்த மூன்று பேரும் விசாரணைக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

  09:08:52 AM


 • திருவள்ளுவர் இந்து மதம் எனக்கூறுவது அவரவர்களின் விருப்பம்.

  திருவள்ளுவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என அரசாணை ஏதும் இல்லை.

  திருவள்ளுவருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

  09:08:30 AM


 • நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 17 காசு சரிந்து ரூ.3.70 ஆக நிர்ணயம்

  நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை கடந்த 4 நாட்களில் 45 காசு சரிந்துள்ளது.

  09:07:56 AM


 • அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக்கொள்வதும் அரசின் கடமை - மு.க.ஸ்டாலின் ட்வீட்

  09:07:33 AM


 • நாடு முழுவதும் இன்று வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட்டு நாளை முதல் பணிக்கு திரும்புமாறு இந்திய பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

  09:07:12 AM


 • சென்னை கி​ரீன்வேய்ஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ சந்திப்பு.

  09:07:02 AM


 • வாழை இலை பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்கலாம்.

  சுய உதவிக்குழுக்கள் மூலம் துணிப்பைகளை தயார் செய்து விற்பதற்கான சூழலை உருவாக்கலாம்; இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுக்க குழுவை நியமிக்க மதுரை ஆணையருக்கு உத்தரவு - உயர்நீதிமன்ற கிளை

  09:06:49 AM


 • மதுரையில் கடந்த 11 மாதங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக ரூ 28 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை மாநகராட்சி தகவல்.

  09:06:19 AM


 • விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடிப்படை பணிகள் நிறைவு; ககன்யான் திட்டத்தின் கீழ் அடுத்தக்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன

  - இஸ்ரோ தலைவர் சிவன்

  09:06:07 AM


 • மேலும் படிக்க...