கர்நாடகா, மகாராஷ்டிரா, அடுத்து தமிழ்நாடா?

RRK

கர்நாடகா, மகாராஷ்டிரா, அடுத்து தமிழ்நாடா? - மாநில கட்சிகளை மிரட்டும் தேசிய கட்சிகள் - ஒரு தொடர்கதை

கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதியன்று, அதிமுக பொதுச் செயலாளராக இருந்த வி.கே.சசிகலா தமிழக முதல்வராகப் பதவியேற்க இருந்த நிலையில், தமிழக அரசியலில் நம்பமுடியாத திருப்பம் ஒன்று நடந்தது.

சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து எதிர்பாராதவிதமாகத் தியானத்தில் ஈடுபட்ட அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன்னை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்ததாகவும், சசிகலாவின் பெயரை முதல்வர் பதவிக்குத் தன்னை கட்டாயப்படுத்தி முன்மொழிய வைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு 11 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க, அது தனி அணியாக உருவெடுத்தது.

அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் விரைவில் சசிகலாவுக்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் நம்பமுடியாத நிகழ்வுகள் தமிழக அரசியலில் அரங்கேறியது.

கூவத்தூர் நட்சத்திர விடுதி ஒன்றில் சசிகலா ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராகப் பதவியேற்றார். சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி சசிகலா சிறை சென்றார்.

திடீர் திருப்பம்: முதல்வரானார் பட்னவிஸ்

இதேபோல் வெள்ளிக்கிழமை இரவுவரை மகாராஷ்டிர மாநில முதல்வராக உத்தவ் தாக்ரே பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (சனிக்கிழமை) காலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் மீண்டும் பாஜகவின் தேவந்திர பட்னவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் சகோதரர் மகனான அஜித் பவார் யாரும் எதிர்பாரா வண்ணம் கட்சியின் உத்தரவை மீறி பாஜவுக்கு ஆதரவு அளித்து, அம்மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். பாஜக மற்றும் அஜித் பவார் மீது கடும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.

சிவசேனை தலைவர் உத்தவ் தாக்ரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோர் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய உத்தவ் தாக்ரே, மகாராஷ்டிரா மீது பாஜக தொடுத்த துல்லிய தாக்குதல் இது. நடப்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. கட்சிகளை உடைப்பதைத் தொடர்ந்து பாஜக செய்கிறது என்று கூறினார்.

முன்பு தேர்தல் இயந்திரங்களை வைத்து விளையாடிய பாஜக தற்போது புது மாதிரியான விளையாட்டை ஆரம்பித்துள்ளது. இனி தேர்தலே நடத்தத் தேவையில்லை என்று உத்தவ் தாக்ரே கூறினார்.

இந்த கூட்டத்தில் பேசிய சரத் பவார், பாஜக எப்போதுமே குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை அமைக்கும் போக்கைப் பின்பற்றி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டர்கள், பாஜகவுடன் ஒருபோதும் கைகோர்க்க மாட்டார்கள், என்றார்.

இந்நிலையில், கடந்த ஜுலை மாதத்தில் கர்நாடக மாநில அரசியலில் நடந்த குழப்பங்களையும் நினைவுகூரவேண்டும்.

ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமாவால் நெருக்கடி தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். இதனால் ஆளும் கூட்டணிக்கு நெருக்கடி தொடங்கியது.

இந்த ராஜிநாமா கடிதத்தைச் சபாநாயகர் ஏற்கவில்லை என்ற நிலையில், தங்களது ராஜிநாமா கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறி, அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

பின்னர் வரிசையாக நடந்த அரசியல் குழப்பங்கள் மற்றும் நாடகங்களின் நிறைவில் முதல்வராக இருந்த குமாரசாமி பதவி விலக நேரிட்டது.

அம்மாநில பாஜக தலைவர் பி.எஸ் எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என மேலே குறிப்பிடப்பட்ட இந்த 3 மாநிலங்களில் ஆட்சியோ அல்லது முதல்வரோ மாறுவதற்கு பாஜகவே காரணம் என்றும், மாநில அரசுகளை, மாநிலக் கட்சிகளை பாஜக வளரவிடுவதில்லை; மாநிலக் கட்சிகளை வளைக்கிறது என்று அக்கட்சி மீது அண்மைக்காலமாக அரசியல் அரங்கில் தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இதேபோல் கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் குறைந்த உறுப்பினர்களே வென்ற பாஜக, அங்கு ஆட்சியமைக்க அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

மாநிலக் கட்சிகளையும், அரசுகளையும் பாஜக ஆட்டிப்படைக்க முயல்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பிபிசி தமிழிடம் மூத்த பத்திரிகையாளர் டி. சுரேஷ்குமார் பேசினார்.

மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய கட்சிகள் மாநிலக் கட்சிகளை, மாநில அரசுகளை மிரட்டுவது புதிதல்ல. சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற முகமைகள் மிரட்டல் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்தபோதும் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது என்று அவர் நினைவுகூர்ந்தார்.

பாஜக ஒருபடி மேலே போய், ஒரு கட்சியையே கலைத்து தன் கட்சியில் இணைய வைப்பது, கட்சி தாவல் தனிச்சட்டத்தில் சிக்கிக்கொள்ளாதவாறு, மாற்றுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜிநாமா செய்ய வைப்பது. அதன் மூலம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவது என புதிய அரசியல் பாணியை மேற்கொள்கிறது என்று கூறினார்.

தமிழகத்தில் 2017-இல் முதல்வராக இருந்த ஓபிஎஸ்தான் சசிகலா பெயரை முதல்வர் பதவிக்கு முன்மொழிந்தார். தன்னை அவ்வாறு செய்ய சசிகலா தரப்பு கட்டாயப்படுத்தியதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியது ஏற்புடையது அல்ல என்றார்.

இதில் பாஜகவின் நேரடி பங்கில்லை என்றாலும், மறைமுக பங்கு இருக்கிறது என்றே கூற வேண்டும்

பாஜக ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தியை தியானம் செய்ய செல்வதற்கு முன்பு ஓபிஎஸ் சந்தித்துள்ளார். இதனை குருமூர்த்தியே பின்னர் தெரிவித்தார். தான் அழைக்கவில்லை என்றும், ஓபிஎஸ் தானாக வந்து தன்னை சந்தித்தாக கூறிய குருமூர்த்தி, தன்னிடம் ஓபிஎஸ் முறையிட்டதால், இனியும் அமைதியாக இருப்பது நியாயமில்லை என்று தான் கூறியதாக குருமூர்த்தி தெரிவித்தார் என்று சுரேஷ்குமார் நினைவுகூர்ந்தார்.

தமிழகத்தை வசப்படுத்த பாஜகவின் திட்டமிடுகிறதா ?

தியானம் செய்தது அவரது முடிவுதான் என்று குருமூர்த்தி கூறினார். அதேவேளையில், சசிகலாவுக்கு போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலும் அவரின் பதவியேற்பு முடிந்தளவு தள்ளிபோடப்பட்டது. பின்னர் அந்த காலகட்டத்தில் வெளிவந்த சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில் சசிகலா சிறை சென்றார் என்றார்.

பின்னர் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் இணைய பாஜக விருப்பப்பட்டது, முயற்சிகளும் மேற்கொண்டது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனக்கு கூட்டணி வேண்டும் என்பதால் இந்த அணிகள் இணைப்புக்கு பாஜக ஆதரவு தெரிவித்தது என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் இந்த அரசு தொடர்ந்து நீடித்திருக்க முடியாது என்று கூறிய அவர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், மாநில தலைமை செயலாளர் இல்லம் என நடந்த சோதனைகள் பற்றி அதற்கு பிறகு அந்த பெரிய தகவலும் வெளியாகவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்து திமுக வெளியேறியபோது, அதற்கு அடுத்த நாளே ஸ்டாலினின் வீட்டில் ரெய்டு நடந்தது. இது தெரியாமல் நடந்த ஒன்று என்று காங்கிரஸ் கட்சி அப்போது சமாளித்தது.

பாஜக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதில், அரசியல் அத்துமீறலில் காங்கிரஸ் கட்சியையும் மிஞ்சிவிட்டது எனலாம். இது அரசியல் சாணக்கியத்தனம் அல்ல. அதிகார துஷ்பிரயோகம் தான் என்றார் சுரேஷ்குமார்.

கோவாவில், கர்நாடகத்தில், மகாராஷ்டிராவில் நடந்தது இனி தமிழ்நாட்டிலும் நடக்கலாம். தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நடக்கும் பட்சத்தில், ஒருவேளை ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைந்து போட்டியிட்டு, அதிமுக, திமுக தனி அணிகளாக போட்டியிட்டால், எந்த அணிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டால், கோவாவில், கர்நாடகத்தில், மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்வு இஙகும் நடக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

பாஜகவை வலுவாக எதிர்க்க நம்பகமான, பலமான எந்த கட்சியும் தேசிய அளவில் இல்லை என்ற நிலை தற்போது உள்ளது . மாநில கட்சிகளிலும், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ஆகிய இரண்டு மட்டுமே வலுவாக எதிர்த்து வெற்றி கண்டுள்ளன என்றார்.

மேற்குவங்கத்தில் பாஜக வலுவாக காலூன்றி விட்ட நிலையில், தமிழகத்தில் பழைய பாணி அரசியலை வைத்தே ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற முடியாது என்றார்.

தமிழகத்தில் காலூன்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாஜக செய்து வருகிறது.. தாங்கள் வலுவாக இல்லாவிட்டாலும் தங்களுக்கு இணக்கமான மூன்றாவது அணியை களமிறக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர் என்று சுரேஷ்குமார் கூறினார்.

என்ன தான் செய்கிறது காங்கிரஸ்?

பொதுவாக காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சியின் மாநில தலைமைகளை வளரவிடாமல் செயல்படும். மாநில முதல்வர்களை, தலைவர்களை மாற்றுவது என்ற அணுகுமுறை தற்போது அக்கட்சிக்கு பாதகமாக அமைந்துவிட்டது

அதனால் தான் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜிநாமா செய்த பிறகு, எந்த தலைவரும் அந்த பொறுப்பை ஏற்க தயாராக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தையும் சேர்த்து இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பாஜகவை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதே தற்போதைய நிலை

மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம் குறித்தும், மாநில கட்சிகளை வளைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக கூறப்படுவது குறித்தும் பத்திரிகையாளரும், தி கஸின்ஸ் தாக்ரே புத்தகத்தின் ஆசிரியருமான தவல் குல்கர்னி பிபிசி தமிழிடம் உரையாடினார்.

சிவசேனை நீண்ட காலமாக பாஜக கூட்டணியில் இருந்தபோதிலும் அக்கட்சியை, அக்கட்சியின் அரசியல் சாதுர்யத்தை புரிந்துகொள்ள தவறிவிட்டது என்றே கூறவேண்டும் என்று அவர் கூறினார்.

பாஜக ஓவ்வொரு மாநிலத்திலும் காலூன்ற, வலுவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள குறைந்த கால மற்றும் நீண்ட கால செயல்திட்டங்களை நன்றாக சிந்தித்து செயல்படுத்துகிறது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சி தன்னை நன்கு சுயபரிசோதனை செய்ய கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிரா பொறுத்தவரை அடுத்து வரும் நாட்களில் சிவசேனை கட்சிக்கு சோதனையான காலம்தான். மீண்டும் பாஜகவுடன் இணைவதோ அல்லது இனி காங்கிரசுடன் கூட்டணியாக செயல்படுவதோ அக்கட்சிக்கு எளிதான விஷயம் அல்ல.

மகாராஷ்டிரவில் ஆட்சியமைக்க முடிவுசெய்த பிறகு எதிர்க்கட்சிகள் விரிவாக செயல்பட்டிருக்க வேண்டும். சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும், தங்களின் குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் இதர அம்சங்களைப் பேசி முடிவெடுக்க 10 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொண்டனர் என்றார்.

இந்த கால தாமதம் தான் அவர்களுக்கு எதிராகவும், பாஜகவுக்கும் ஆதரவாகவும் அமைந்துவிட்டது என்று அவர் கூறினார்.

தேசிய அளவிலும், பல மாநிலங்களிலும் பாஜகவை வலுவாக எதிர்க்க எதிர்க்கட்சிகள் நன்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றும், குறிப்பாக காங்கிரஸ் கட்சி தன்னை நன்கு சுயபரிசோதனை செய்தால் மட்டுமே, அக்கட்சியால் பாஜகவை வலுவாக எதிர்க்க இயலும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

Source : BBC Tamil

Related Posts you may like

சுடச் சுட...

 • சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரிப்பு - ரயில்வே

  04:53:53 AM


 • செக் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்பை எதிர்த்து, புகார்தாரர்கள் உயர்நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

  04:53:41 AM


 • 5 மாநிலங்களில் இருந்து விமானம் வர தடை விதிக்கவில்லை - கர்நாடக அரசு

  விமானங்களை குறைவாக இயக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்துள்ளோம்

  04:53:20 AM


 • மதுரை மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகேயுள்ள மூன்று அடுக்குமாடி ஜவுளிகடையில் தீ விபத்து; தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்

  04:53:02 AM


 • "பல்கலைக்கழகம்" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது

  நாடு முழுவதும் உள்ள 127 தனியார் நிகர்நிலை கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்வி நிறுவன பெயருக்கு பின்னால் "பல்கலைக்கழகம்" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது

  மீறினால் சட்ட நடவடிக்கை. - UGC எச்சரிக்கை

  04:52:48 AM


 • திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம்

  04:52:17 AM


 • 7 கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

  04:52:05 AM


 • அதிமுகவிலிருந்து பதவி நீக்கம்

  தேனி கோம்பை பேரூராட்சி அதிமுக பொருளாளர் கணேசன் அதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்

  2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தில் கைதானதை தொடர்ந்து அதிமுக தலைமைக்கழகம் நடவடிக்கை

  04:51:50 AM


 • வனப்பகுதிக்குள் இன்று முதல் கட்டுப்பாடு

  கொரோனா வைரஸ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அமைந்திருக்கும் சுற்றுலா தளத்திற்கு மணிமுத்தாறு அருவி, அகத்தியர் அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு, சொரிமுத்தையனார் கோவில் ,போன்ற பகுதியில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை வனத்துறை அறிவிப்பு

  08:14:06 AM


 • துபாயில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

  08:13:51 AM


 • மேலும் படிக்க...