முற்பட்டோர்க்கு இடஒதுக்கீடு

கு.அழகியநம்பி


வலிமை மிக்கவர்களோடு வலிமை குறைந்தவர்கள் போட்டி போட்டு வெல்ல முடியாது. திறமை உள்ளவர்களோடு திறமை இல்லாதவர்கள் போட்டியிட்டு வெல்ல முடியாது, இந்த அடிப்படையில்தான் வலிமை குறைந்தவர்கள், திறமை இல்லாதவர்கள் ஆகியோர்க்குத் தனியே இடஒதுக்கீடு தேவைப்படுகிறது.

முன்னேறிய சாதியினர்

நம்முடைய சமூகம் சாதிகளால் ஆனது. பிராமணர், முதலியார், பிள்ளை முதலான சில சாதிப்பிரிவினர் நீண்ட காலமாகக் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தனர், அதனால் அவர்கள் அரசு வேலை வாய்ப்புகளையும் பெற்றனர். அந்தச் சாதிகளைச் சேர்ந்தோர் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெற்றதால் முன்னேறிய சாதியினர் அல்லது முற்பட்டோர் என்று அடையாளப்படுத்தப்பட்டனர்.

முற்பட்டோர் அல்லாத சாதிப் பிரிவினருக்கு நெடுங்காலமாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. கல்வி வாய்ப்புக் கிடைத்த காலத்தில் முற்பட்டபிரிவினரோடு போட்டியிட்டு அந்த வாய்ப்பினைப் பெற முடியாத நிலை இருந்தது. வாய்ப்புக் கிடைத்துக் கல்வி கற்று வெளியே வந்தாலும் முற்பட்டோருடன் போட்டியிட்டு வேலை வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. அதனால் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர், ஆசிரியர், அரசு அலுவலர் முதலானோர் முற்பட்ட சாதிப்பிரிவனராகவே இருந்தனர்.

இடஒதுக்கீடு ஏன்?

சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் மக்கள் தொகையில் அவர்களுக்கு உள்ள விகிதாச்சாரத்தின் அடிப்படையில் கல்வி – வேலை வாய்ப்புகளைப் பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது.

வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், சென்னை இராச்சியத்தின் ஆட்சிப் பொறுப்பை நீதிக்கட்சி பெற்றிருந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் தான் முதல் முதலாக சென்னை இராச்சியத்தில் 1920-களில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த இடஒதுக்கீடு, 1950-இல் இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வரும் வரை சிறுசிறு மாறுதல்களுடன் நடைமுறையில் இருந்தது.

இடஒதுக்கீடு செல்லாது

1951-ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சார்பில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த இருவரும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லத்தக்கது அன்று எனத் தீர்ப்பு வழங்கியது.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த இடஒதுக்கீட்டால், பிற்படுத்தப்பட – தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தோர் ஓரளவு கல்வி வேலை வாய்ப்புகளைப் பெற முடிந்தது. குறைந்த அளவிற்காவது சமூக நீதி கிடைத்து வந்தது.

அரசியல் சட்டத் திருத்தம்

நீதிமன்றத் தீர்ப்பால் சமூக நீதி சாகடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிற்படுத்தபட்ட – தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். தலைமையமைச்சராக இருந்த சவகர்லால் நேரு 1954-ஆம் ஆண்டில் அரசியல் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

சமூக அடிப்படையிலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள (socially and educationally backward) பிரிவினர்க்காக இடஒதுக்கீடு செய்யலாம் என்று அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

அந்தத் திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. சிலர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இன்று, மோடி அரசு, பொருளாதாரத்தில் பின் தங்கிய மேல் சாதியினர்க்காக 10 விழுக்காடு இடஒதுக்கீடு செய்வதற்காக, அரசியல் சட்டத்தின் 15-16-ஆவது பிரிவுகளில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வரைவைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

தேர்தல் ஆதாயத்திற்காக…

பொருளாதார அடிப்படையில் உயர்சாதியினர்க்குத் தனி இடஒதுக்கீடு செய்வது சரியா? முறையா? தேவையா என்றெல்லாம் எண்ணிப் பார்க்காமல் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் உயர்சாதினரின் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற தன்னல நோக்கத்துடன் மட்டுமே மோடி அரசு செயற்படுகிறது.

உயர்சாதியினரின் ஆதரவை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவே பா.ச.க.-அல்லாத பிற கட்சி உறுப்பினர்களும் மோடி அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு காட்டியுள்ளனர்.

பொருளாதார அடிப்படை நிலையானது அன்று

பிறப்பால் சொல்லப்படுகின்ற சாதியின் அடிப்படையிலேயே உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது. பொருள் வளம் உள்ளவராக இருந்தாலும் கீழ்ச்சாதியில் பிறந்த ஒருவர் உயர்சாதியராக மதிக்கப்படுவதில்லை.

ஒருவருடைய பொருள்வளம் என்பது நிலையாக இருப்பதில்லை; பல்வேறு காரணங்களால் பொருள்வளம் குறையலாம் அல்லது கூடலாம்.

நேற்றுப் பொருளாதார நிலையில் பின் தங்கிய ஒருவர் இன்று உயர்நிலையை அடையலாம்; நாளையே மீண்டும் பின் தங்கியவர் ஆகலாம். அதனால் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு செய்வது ஏற்கத்தக்கது அன்று.

பொதுப்பிரிவு

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர்க்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் போக எஞ்சிய இடங்கள் பொதுப்பிரிவு (Open Competition) என ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவில் உயர்சாதியினர் மட்டுமின்றித் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய அனைத்துப் பிரிவினரும் தகுதி (Merit) அடிப்படையில் போட்டியிடலாம்.

பொதுப்பிரிவில் உயர்சாதியினர் அல்லாத பிற சாதியினர் மிக மிகக் குறைந்த அளவிலேயே தகுதி அடிப்படையில் இடம் பெற முடிகிறது. எஞ்சிய இடங்கள் அனைத்தும் உயர்சாதியினரே இடம்பெறுகின்றனர்.

மக்கள் தொகையில் விகிதாச்சாரத்திற்கு அதிகமாகவே உயர்சாதியினர் இடம் பெறுகின்றனர். இந்த நிலையில் உயர்சாதியினர்க்குப் பொருளாதார அடிப்படையில் பத்து விழுக்காடு தனி இடஒதுக்கீடு செய்திருப்பது தேவையில்லாதது; முறையில்லாதது.

புதிய வரலாறு

முறையில்லாதவற்றைச் செய்வதில் முனைப்புக் காட்டுகின்ற மோடி அரசு, போகிற போக்கில் செய்துள்ள முறைகேடுதான் உயர்சாதியினர்க்கு இடஒதுக்கீடு என்பதை அறிவறிந்த மக்கள் உணர்வார்கள்.

தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு வருமான வரம்பு கொண்டு வந்த எம்.ஜி.ஆர். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். அதனால் வருமான வரம்புச் சட்டத்தைத் திரும்பப் பெற்றார் என்பது வரலாறு.

உயர்சாதியினருக்கு வருமான வரம்பில் இட ஒதுக்கீடு செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ள மோடி அரசும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வி கண்டு புதிய வரலாறு படைக்கும் என்பது உறுதி.

- பேராசிரியர் அறிவரசன்